சென்னை:
சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சாலையோர வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் உள்பட அனைத்து வணிர்களுக்கும் கொரோனா சோதனை செய்யும்பணியை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகவே சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து வணிகர்களுககும் கட்டாயம் கொரோனா சோதனை செய்யும்பணியை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.
வியாபாரிகள் மற்றும் அங்கு வரும் பொதுமக்களால் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் நோக்கத்தில்,  வியாபாரிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

மாநகராட்சி நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம், சென்னையில் ஒவ்வொரு பகுதியில் உள்ள  மார்க்கெட் மற்றும் கடை வீதிகள், சாலையோர வியாபாரிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள்  நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தவிர்த்து சென்னை மாநகராட்சியில் காய்ச்சல் முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் தினசரி 13 ஆயிரம் பேருக்கும், தற்போது வரை 5 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.