ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி…. வழக்கு தொடரும் ஆசிரியர் சங்கம்…

Must read

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும்  இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள மாநகராட்சி ஆணையரின் மிரட்டலை கண்டித்து, ஆசிரியர் கூட்டமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதையடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில், மாநகராட்சி நிர்வாகத்தை  எதிர்த்து, ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில்  இன்று  ரிட் பெட்டிசன் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. சென்னையில் தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருப்பதுடன், வயதானவர்கள், நோய் பாதிப்பு உடையவர்கள், சர்க்கரை மற்றும் இருதய நோய் உள்ளவர்கள்  கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், நடை பயிற்சிக்குக் கூட வர வேண்டாம்  என தமிழகஅரசும், சென்னை  மாநகராட்சியும் எச்சரித்து வருகின்றன.

ஆனால், கொரோனா களப்பணிக்கு மாநகராட்சி ஆசிரியர்களை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மட்டுமின்றி வயதான மற்றும் நோய் பாதிப்பு உள்ள ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த சுமார்  10 பேர் வரை கொரோனா நோயால் மரணம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால், மாநகராட்சி நிர்வாகமோ,  அதை மறைத்துவிட்டு, அவர்கள் எல்லாம் கல்லீரல், கணையம், சிறுநீரக பாதிப்பால் இறந்ததாக எப்போதும் போல்தவறான தகவல்களையே தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில்,  சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி தொடக்க கல்வி அலுவலகர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  ஏப்ரல் 25ந்தேதி அன்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்அளித்த பேட்டியின்போது, கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா? என்ற கேள்விக்கு, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகி உள்ளது.

அதுபோல,  ஏற்கனவே, ஆசிரியர் சங்கங்களின் மூலமும் வயது முதிர்ந்த ஆசிரியர்களை கொரோனா பணிக்கு அழைக்க வேண்டாம் என  ஏப்ரல் 24ந்தேதியும், 27ந்தேதியும் மாநகராட்சி ஆணையர் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல ஜாக்டோ ஜியோ அமைப்பும் சென்னை மாநகராட்சி ஆணையாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த  மே மாதம்  2ந்தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தீரஜ் குமார், சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக  கடிதம் எழுதி உள்ளார். அதில், 50வயது மேற்பட்ட ஆசிரியர்களை கொரோனா பணிக்கு அழைக்க  வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால்,  சென்னை மாநகராட்சி ஆணையாளரோ, தமிழக கல்வி அமைச்சரின் அறிவிப்பு, கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அறிவுறுத்தல் எதையும் கண்டுகொள்ளாமல்,  சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் கண்டிப்பாக  ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகவல்களை பதிய வேண்டும் என்றும் இந்த பணியில் ஈடுபடுவோர் ஸ்ட்ரீட் வாரியர் என அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பல ஆசிரியர்களுக்கு, களப்பணியின் போது கொரோனா பாதித்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றும், அதற்காக மாநகராட்சி  மண்டல அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தற்போது எந்தவித போக்குவரத்தும் இல்லாத நிலையிலும், ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட வாகனத்தில் செல்ல முடியாத நிலையில், பல ஆசிரியர்களுக்கு பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க போனில் பேசும் வேலையை, ஆசிரியர்களால் வீட்டில் இருந்தே செய்ய முடியும், அல்லது ஆசிரியர்கள் நடந்து செல்லும் அளவில், அருகே உள்ள மாநகராட்சி பள்ளிகளிலோ, அருகில் உள்ள  மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தோ செய்ய முடியும். ஆனால், அதனை  ஏற்க மறுக்கும் மாநகராட்சி, பணி வழங்கிய இடத்திற்குத்தான் ஆசிரியர்கள் வர வேண்டும் என்று மிரட்டி வருவதுடன் பணிக்கு வராத ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்வார்கள் என்றும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டதுடன்,  மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக  ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
மனுவில்,  ஸ்ட்ரீட் வாரியர்ஸ் அல்லது மண்டல கட்டுப்பாட்டு அறையில் டெலி-கவுன்சிலிங் போன்ற கோவிட் -19 தொடர்பான கடமைகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை  தடை செய்ய வேண்டும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம்  இருந்து அவர்கள் கொரோனா பணிக்கு வர விரும்புகிறார்களா என்பது குறித்து எந்தவித கருத்தும் கேட்காமல், அவர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
மேலும்,  சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், பணியிடத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான சமூக தூரத்தை உறுதி செய்வதற்கும், தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதைத் தவிர, மாற்றாக, ஆசிரியர்கள் வீட்டிலிருந்து டெலி-கவுன்சிலிங் சேவைக்கு வேலை செய்ய அனுமதிக்க  வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு   சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை  பட்டியலில் இடம்பெற்றதும்,  ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதுபோல ஜாக்டோ ஜியோ அமைப்பும் மாநகராட்சி ஆணையாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின்  மிரட்டலுக்கு அஞ்சி பலரும் விருப்பமின்றி கொரோனா கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் உடனே அரசு தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article