சென்னை: இன்றுமுதல் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, நாளை (30ந்தேதி) சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்து உள்ளது.
விடுமுறை நாளில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அன்று பதிவு பணிக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், நாளை (மார்ச் 30ந்தேதி சனிக்கிழமை) பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2023-24ம் நிதியாண்டின் கடைசி வேலை நாளான நாளை (மார்ச் 30ம் தேதி) அதிக அளவில் பத்திரவுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், அன்றைய தினம், அனைத்து சார் – பதிவாளர் அலுவலகங்களையும் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தபடி சனிக்கிழமைகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதேபோல் முக்கியமான சுபமுகூர்த்த நாட்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அதுபோல நாளையும் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு சட்டசபையில் நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசின் மொத்த வருவாயான ரூ.1.39 லட்சம் கோடியில் வணிக வரி, பதிவுத் துறை மூலமாக 84 சதவீதம் அதாவது, ரூ.1.19 லட்சம் கோடி கிடைக்கிறது. வணிக வரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை காரணமாக முந்தைய ஆண்டை (2020-21) விட, இந்த ஆண்டு (2021-22) கூடுதலாக ரூ.8,760 கோடி கிடைத்தது. அதேபோல, பதிவுத் துறையிலும் கூடுதலாக ரூ.3,270 கோடி வந்தது. பதிவுத் துறையில் தற்போது பதிவு செய்யப்படும் ஆவணப் பதிவில் 85 சதவீதம் அன்றைய தினமே பதிவு ஆவணங்கள் வழங்கப்படுகிறது.
சார்-பதிவாளர் அலுவலகங்களில் குறுகிய அவகாசத்தில் ஆவணப் பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக, ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கனை ரூ.5 ஆயிரம் கூடுதல் கட்டணம் பெற்று தத்கால் முறையில் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். முதல்கட்டமாக, அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்-பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். என்றும், அலுவலகங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, விடுமுறை நாளில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அன்று பதிவு பணிக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், 2023-24ம் நிதியாண்டின் கடைசி வேலை நாளான மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை வருவதாலும், 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், அதிக அளவிலான அரசு நிதி பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளையும் வேலை நாளாக அறிவித்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.