நெல்லை:
தமிழகத்தில் வரும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயக்கும் பணி நிறை வடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரயில்வே பொதுமேலாளர், இன்று அங்குள்ள செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து அங்கிருந்த பயணிகளிடமும் கேட்டறிந்தவர் அந்த பகுயை சுற்றிப் பார்த்தார். அவருடன், மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் மற்றும் ரயில்வே அதிகாரிகளும் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மெக்கானிக்கல் பிரிவு உபகரணங்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர், ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தவர், செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “செங்கோட்டை முதல் விருதுநகர் வரை தண்டவாள உறுதித்தன்மை, சிக்னல்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது என்றும், பயணிகளின் கோரிக்கையான, செங்கோட்டையில் இருந்து புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், செங்கோட்டையில் இருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு புதிய ரயில் பாதை அமைப்பது உட்பட பல்வேறு இடங்களில் புதிய ரயில் பாதைகள் அமைக்க தமிழக அரசிடம் இருந்து நிலம் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தவர், பிரச்சினைகள் முடிந்த பிறகுதான் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், மாநிலம் அனைத்து ரயில் பாதைகளையும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் மின்மயமாக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.