சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும்  4,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 3,18,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கையும்  4,629 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்,  31,136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக, தனியார் விடுதிகள், மருத்துவமனைகளில் அரசின் அனுமதியின்றி கொரோனா பராமரிப்பு மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனியார் விடுதிகள், மருத்துவமனைகளில் தேவையான வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு பராமரிப்பு மையம் தொடங்கலாம். இதற்கு அனுமதி பெற வேண்டியது அவசியமில்லை. ஆனால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அதன்படி  “jagadeesan.gcc@gmail.com” என இமெயில் முகவரிக்கு, தகவல்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள், விடுதிகளில் உள்ள அறைகளில் தக்க வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்பட அடிப்படைகளை விடுதி நிர்வாகம் மேற்கொள்ளும். இதற்காக அந்த விடுதிகள் வாடகை உள்பட அடிப்படை கட்டணங்களை வசூலிக்கவும் அனுமதி வழங்ககப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள், இதுபோன்ற விடுதிகளையும், தனியார் மருத்துவமனைகளிலும் தங்கி, தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.