கன்னியாகுமரி: அனைத்து ஊராட்சிகளும் விரைவில் இணையங்கள் மூலம் இணைக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். அதுபோல கன்னியாகுமரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், துறைசார்பாக ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். அப்போது அம்மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் உடனிருந்தனர். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக தேவையான கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி வருவதாக கூறியவர், அதுதொடர்பாக அனைத்து துறைகளுக்கும் பல்வேறு ஆலோசனை வழங்கி உள்ளார். ஊரக வளர்ச்சி துறைக்கும் பல்வேறு பங்களிப்பை வழங்கி வருகிறார். அதன்படி, கிராமப்புற மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். அதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டது.. இதன் மூலம் வேலை வாய்ப்பு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி 1 லட்சத்து 19 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்துள்ளோம். ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மையம் கன்னியாகுமரியில் விரைவில் அமையும். இதற்கான இடத்தை இன்று ஆய்வு செய்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், மாநிலம் முழுவதும் உள்ள  12ஆயிரத்து 525ஊராட்சிகளும் இணையவழி மூலம் இணைக்கப்படும் என சட்டமன்றத்தில்  ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வெகுவிரைவில் அனைத்து ஊராட்சிகளும் இணையங்களால்  இணைக்கப்படும் என்று கூறினார்.