சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அளித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அளப்பரிய வளங்களை பூமிக்கு கொடையாக அளித்துள்ள இயற்கையையும், சூரியக் கடவுளையும் வணங்கிப் போற்றும் இந்நன்நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன். இத்திருநாளில் தமிழர்தம் வாழ்வு மேன்மேலும் உயர வேண்டும்; நமது தொன்மை கலாசாரமும், பாரம்பரியமும் செழிப்புற வேண்டும்.

முதல்வர் கே.பழனிசாமி: வேளாண் பெருங்குடி மக்களின் நலனை காக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்களின் வாழ்வு சிறக்க உன்னத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உன்னத பண்டிகையாம் பொங்கல் திருநாளில், தமிழ் மக்களின் வாழ்வில் வளமும், நலமும், அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: அகிலமெங்கும் தமிழால் இணைந்திருந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் உளமார்ந்த தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: எத்தனையோ விழாக்களும், பண்டிகைகளும் வருவதுண்டு. அவை மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், வட்டார ரீதியாகும் மாறுபடுகின்றன. ஆனால், ஒட்டு மொத்த தமிழினமும் ஒருசேர கொண்டாடி மகிழும் ஒரே விழா பொங்கல் மட்டுமே. அத்தகைய உயர்வு தாழ்வற்ற சமத்துவ நாளில் அனைவரது வாழ்விலும் வளம் நிலைக்கட்டும். தரணியெங்கும் தமிழ் செழித்தோங்கட்டும்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திக் காட்டியுள்ளார். அதன் விளைவுதான், இந்த பொங்கல் விழாவை உலக நாடுகளிலேயே தலைசிறந்த நாடுகள் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றன.  அறுவடைத் திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்க பலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்த வேண்டும். நம் நாடு மேலும் பல வெற்றிகளை அடைய இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்.

காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தின் மாண்பையும், பெருமையும் பறைசாற்றுகிற பண்டிகை பொங்கல். இந்த நன்னாளில் தமிழ் குடிகளின் மேன்மை சிறப்பு வேண்டும்.

வைகோ (மதிமுக): தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் காலம் காலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அடையாளமாக பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்கின்றது. இந்த நன்நாளில் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், விவசாயத்தையும், விவசாயிகளையும் காத்து நிற்கவும் தமிழக மக்கள் பொங்கி எழ உறுதிகொள்ளும் நாளாக இந்த பொங்கல் திருநாள் அமையட்டும்.

திருமாவளவன்(விசிக): பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகிவரும் நம் மண்ணை மீட்கவும், நமது வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் விவசாயப் பெருமக்களுக்கு வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தப் பொங்கல் திருநாளில் ஜனநாயக சக்திகள் யாவரும் உறுதியேற்போம்.

டிடிவி தினகரன்(அமமுக): தமக்கு எத்தனை இன்னல்கள் வந்தாலும், மக்களின் பசியாற்ற உணவளிக்கும் விவசாயப் பெருமக்களை இந்த நல்ல நாளில் வணங்கிப் போற்றிடுவோம். தை திங்கள், அனைவரின் வாழ்விலும் நல்விடியலை ஏற்படுத்தட்டும்.

ஜி.கே.வாசன்(தமாகா): பொங்கல் திருநாளில் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும். மாநிலம் வளர்ச்சியுற இயற்கையும், இறைவனும் துணைநிற்கட்டும்.

தி.க. தலைவர் கி.வீரமணி: சமூக நீதி, மதச் சார்பின்மை, பெண்ணுரிமை ஆகியவை எதிர்கொண்டு வரும் சவால்களை முறியடித்து அனைவருக்கும் வளமளிக்கும் இனிய பொங்கலாக இந்நாள் அமையட்டும்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: உலகத் தமிழர்களின் உன்னத திருநாளாம் பொங்கல் நன்னாளில் வீட்டுக்கொரு விவசாயியை உருவாக்க சபதமேற்போம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: உழைப்பை போற்றி வழிபடும் தமிழ் இனத்துக்கு இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

மஜக பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி: தமிழர்களை இணைக்கும் உறவு திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளில் மக்களின் வாழ்வில் பூரிப்பும், புத்துணர்வும் பெற உறுதியேற்போம்.

இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் நிஜாமுதீன்: பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும், உழவர்கள் வாழ்வு மேம்படவும் வாழ்த்துகள்.
என்று அவர்கள், தங்களது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.