டில்லி

காஷ்மீர் மாநில கூட்டணி அரசில் இருந்து பாஜக அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவு இட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டார்.   இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.   இவர்களை கைது செய்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காஷ்மீர் மாநில கூட்டணி அமைச்சரவையில் உள்ள இரு பாஜக அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக அமைச்சர்கள்  போராட்டத்தில் கலந்துக் கொண்டது  நாடெங்கும் சர்ச்சையை கிளப்பியது.    போராட்டத்தில் கலந்துக் கொண்ட பாஜக அமைச்சர்களான சந்திரப் பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாம செய்தனர்.   அவர்கள் ராஜினாமாவை மாநில கவர்னரும் முதல்வரும் ஏற்றுக் கொண்டனர்.

இன்று காஷ்மீர் அமைச்சரவையில் உள்ள அனைத்து பாஜக அமைச்சர்களையும் ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவு இட்டுள்ளது.    ராஜினாமா செய்யப்போகும் அமைச்சர்களுக்கு பதிலாக பாஜகவின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி அளிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.,  அனேகமாக வரும் 20 ஆம் தேதி காஷ்மீர் மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.