நேற்றைய சென்னை ஐ.பி.எல். போட்டியின்போது வீசப்பட்ட செருப்புடன் வீரர்

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகமோ போராட்ட சூழலில் இருக்கும்போது, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.

ஆனாலும் பலத்த பாதுகாப்புடன் ஐ.பி.எல். போட்டி சென்னையில் நடைபெறும், வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

மேலும், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ்சுக்லா , “ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறும். அதில் மாற்றம் இல்லை. ஐ.பி.எல். போட்டியை அரசியலாக்க வேண்டாம்” என்றார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இதில் கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற இருந்த மீதி ஆறு போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.

ஆனால்,சென்னையில் இருந்து மீதி ஆறு போட்டிகளையும் வேறு மாநிலங்களுக்கு மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

மேலும், விளையாட்டு அட்டவணைப்படி, சென்னையில் வரும் 20ம் தேதி நடக்க இருக்கும் அடுத்த போட்டிக்கான  டிக்கெட் விற்பனை  நாளை துவங்க வேண்டும். இந்த நிலையில்,  பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக குழு ஆலோசனை இன்று டில்லியில் நடைபெற்றதாகவும், அதில், சென்னையில் தொடர்ந்து போட்டிகளை நடத்தவேண்டாம் என்றும் அப்போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[youtube-feed feed=1]