டில்லி
அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் சி ஏ ஏ வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி,
”இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைக்குக்கொண்டுவந்துள்ளது. நான் இச்சட்டத்தை வரவேற்கிறேன். இது எப்போதோ அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டியது. தாமதமானாலும் பரவாயில்லை. இப்போதாவது அமலுக்கு வந்ததே என்பதில் மகிழ்ச்சி.
இந்தச் சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிறையத் தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முன்னதாக பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், வங்காள தேசத்தில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்க ஏதுவாக எவ்விதச் சட்டமும் இல்லை. தங்கள் நாட்டில் மதத்தின் பெயரால் நடந்த அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இங்கேயும் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அதற்குத் தீர்வு கிடைத்துள்ளது.
பரவலாக சொல்லப்படுவதுபோல் இந்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது எந்த ஒரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறிக்காது. கடந்த காலங்களில் இச்சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. அவை புரிதல் இல்லாததால் அதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அத்தகைய புரிதலற்ற சூழலை விதைத்தனர். உண்மையில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் சட்டத்தை வரவேற்க வேண்டும்.
நம் நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் தூண்டி விடப்படுகின்றனர். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் ஷரத்து இச்சட்டத்தில் இல்லவே இல்லை. சி.ஏ.ஏ. சட்டம் வங்காள தேசம், பாகிஸ்தானில் அவதிப்பட்டு வரும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கவே உள்ளது.”
என்று தெரிவித்துள்ளார்.