டெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 150 நாட்கள் நடைபெற உள்ள பாரத் ஜோடா பாத யாத்திரை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3500 கிலோ மீட்டர் பாரத் ஜோடா பாதயாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்த பாத யாத்திரையானது 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாரத் ஜோடா பாத யாத்திரை அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 80ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (09/08/1942) தான் இந்திய தேசிய காங்கிரஸ் நமது போற்றுதலுக்குரிய தலைவரான மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி போராடியதன் மூலம் 5 ஆண்டுகள் கழித்து நாடு விடுதலை அடைந்தது.
அதேபோல் இன்று நமது இந்திய தேசிய காங்கிரஸ் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத ஒற்றுமை யாத்திரை”யை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கு வதாக அறிவித்துள்ளது. 12மாநிலங்கள் , 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி ஏறக்குறைய 3500 கி.மீ தூரத்தை இந்த பாதயாத்திரை 150 நாளில் நிறைவடையும்.
இளந்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்களும் துடிப்பு மிக்க தொண்டர்களும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அடக்குமுறை,மதவெறி ,இனவெறி, பகுத்தறிவில்லாத அரசியலுக்கு மாற்று சக்தியாகவும் மேலும் தவறான பொருளாதார கொள்கையால் வாழ்வாதாரம் பாதிப்பு,வேலைவாய்ப்பு திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு போன்ற அவலங்களை எதிர்க்க நினைக்கும் நல்ல உள்ளங்கள் இந்த பாதயாத்திரையில் பங்கு பெற வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.