சென்னை: சென்னையில் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் (Indian Civil Service Training Center) அமைக்கப்படும்  என பேரவையில்  அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாவதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இன்று செய்தித்துறை மற்றும்  மனிதவள மேலாண்மைத்துறை கள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

பேரவை இன்றுகாலை வழக்கம்போல  காலை 9.30 மணிக்கு கூடியதும்,  கேள்வி நேரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மாற்று திறநாளிகளுக்கான புதிய சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து,  செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறை, மனிதவள மேலாண்மைத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.   அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அதன்படி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையம் பொது நிருவாகத்தின் வலுவான முதுகெலும்பாக உள்ள அமைச்சு மற்றும் நீதித்துறை அலுவலக பணியாளர்களின் பயிற்சி தேவைகளை நிறைவேற்றுகிறது. அதிகரித்து வரும் பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்நிறுவனத்தின் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

எனவே, புதிய நவீன சமையற்கூடம் அமைத்தல், ஏற்கனவேயுள்ள பல்நோக்கு சமுதாய கூட்டத்தினை உணவுக் கூடமாக மாற்றி அமைத்தல் மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவல் இயந்திரம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. மேற்கண்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு ரூபாய் 3 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும்.

சென்னையில் உள்ள அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரி பணியிடை பயிற்சி உள்ளிட்ட பலதரப்பட்ட குறுகிய கால பயிற்சியுடன் அகில இந்திய பணி அலுவலர்கள் மற்றும் குரூப் ‘அ’ மற்றும் ‘ஆ’ நிலையிலுள்ள அலுவலர்கள் ஆகியோரின் பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னணி பயிற்சி நிறுவனமாக உள்ளது. இவ்வாறான பயிற்சி திட்டங்களை மேலும் திறம்பட வழங்குவதற்காக, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் கட்டடம் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ரூபாய் 55 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையம் வழங்கும் பயிற்சி திட்டங்களை பதிவு செய்யப்பட்ட காணொலிகள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அந்நிறுவனத்திற்கென ஒரு புதிய “காணொலி பகிர்வு தளம்” (Video Sharing platform) தொடங்கப்படும். இது அந்த நிறுவனத்தில் நடத்தப்படும் விரிவுரைகள் / வகுப்புகள் ஆகியவற்றின் நிரந்தர தகவல் களஞ்சியமாக இருக்கும்.

மேலும் இது பொது நிருவாகம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளையும் மற்றும் அரசு நலத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களையும் அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு பொது நூலகமாக விளங்கும்.

அரசுத்துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்திடவும் மற்றும் அந்நியமனங்கள் நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதிப்படுத்திடவும், மக்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலமாக செயல்படும்வண்ணம் ஒருங்கிணைந்த தனித்த வலைதளம் உருவாக்கப்படும். இந்த வலைதளம் மனிதவள மேலாண்மை துறையின் மேற்பார்வையின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படும்.

சென்னை, அண்ணா நகரில் ஒரு புதிய அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையம் அமைத்தல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி, கூடுதலாக சென்னை, அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் ஒரு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககமானது, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது, இதுதொடர்பாக அவ்வப்போது உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதாலும், அவ்வியக்ககத்திற்கு, 2011-2016 வரை வழங்கப்பட்ட கணினிகள், ஒளிநகல் எடுக்கும் இயந்திரம், பல்தொழில் அச்சு இயந்திரம், சர்வர் மற்றும் வீடியோ காமிராக்கள் ஆகியன காலாவதியாகிவிட்டதால் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. எனவே, அவ்வியக்ககத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு e-office திட்டத்தின் மூலம் தேவையான மூலதனச் செலவுகள் மேற்கொள்ளப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 46 பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரிவு அலுவலர்களால் நடத்தப்பெறும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளின் விசாரணைக்கு, குரல் பதிவு செய்யும் கருவி மிகவும் அவசியமானதாக உள்ளது. எனவே ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் ஒரு கருவி வீதம் 46 குரல் பதிவு செய்யும் கருவிகள் ரூ. 6.32 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தால், மேற்கொள்ளப்படும் திடீர் ஆய்வு, வீடுகளை சோதனையிடுதல், பொறி வைத்து பிடித்தல் முதலான வழக்குகளில் நிகழ்விடத்திலேயே அறிக்கைகள் தயார் செய்யப்பட வேண்டியுள்ளதால் அவ்விசாரணை அலுவலர்களுக்கு மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அவசியமாகிறது. எனவே, அவர்களுக்கென 144 மடிக்கணினிகள் ரூ. 99.00 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கையூட்டு தொடர்பாக பொதுமக்கள் தடையின்றி கட்டணமில்லா தொலைபேசி மூலம் எளிதாக புகார் அளிக்க ஏதுவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் முதல்வரின் முகவரி துறையின் கீழ் ரூ.53.75 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.