பாட்னா
வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல் உலகின் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. அவற்றில் இந்தியாவும் ஒன்றாகும், இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இது மூன்றாம் அலை பரவல் என அஞ்சப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமை ஆக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, சனி, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமலாக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் பீகார் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள், விடுதிகள் உள்ளிட்டவை ஜனவரி 21 ஆம் தேதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.