சென்னை: செப்டம்பர் 1ந்தேதிக்குள் அனைத்து கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவித்துஉள்ளது. இந்த  நிலையில் சென்னை நந்தனம் கல்லூரியில்,  பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்  இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த  சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,  “நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியதுடன்,  தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் விரைந்து தடுப்பூசி போடுமாறும்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என்றும்  கூறினார்.

மேலும்,  சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் தான் இங்கு பேசினார் மா.சுப்பிரமணியன். நந்தனம் அரசு கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் மா.சுப்பிரமணியனின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றிச்சுற்றி செயல்பட்டு கொரோனாவை இந்தளவுக்கு தடுத்து நிறுத்தியிருக்கிறார் மா.சுப்பிரமணியன். நான் பேராசிரியராக இருந்த போது பேப்பர் திருத்தும் பணிக்காக நந்தனம் கலைக் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது பரிச்சயமானது இந்த கல்லூரி.

Mount Road Arts college என்று இருந்த கல்லூரியை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியாக மாற்றியவர் கருணாநிதி என்று கூறியதுடன்,  பொறியியல் கல்லூரிகளை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் தான் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.