இ-காமர்ஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக வலம்வந்தார்.

1999ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா சீன அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2019ம் ஆண்டு அதன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இருந்தபோதும் அலிபாபா நிறுவனத்தின் பங்குதாரராக இருந்துவரும் ஜாக் மா கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் சந்தேகம் அடைந்ததை அடுத்து தனது பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்ய முன்வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ‘ஹாங்ஷோவு மா’ஸ் கிட்சன் புட்’ (Hangzhou Ma’s Kitchen Food) என்ற பெயரில் அவர் பிறந்த மாகாணமான ஹாங்ஷோவு-வில் புதிதாக ஒரு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை ஜாக் மா நிர்வகித்து வரும் ஹாங்ஷோவு தஜிங்தோ என்ற நிறுவனத்தின் முதலீட்டில் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘ஹாங்ஷோவு மா’ஸ் கிட்சன் புட்’ நிறுவனம் உணவு பதப்படுத்துதல் மற்றும் ரெடி டு ஈட் உணவு வகைகளை தயாரிக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சீன அரசின் அழுத்தம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பேசப்படாத ஜாக் மா தற்போது சீனாவில் ஆண்டுக்கு சுமார் 82000 கோடி ரூபாய் புரளும் உணவு தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்துள்ளது சீனாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.