பத்மாவத் படத்தில் அலவுதின் கில்ஜி கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்ததற்காக ரன்வீர் சிங், ஐஃபாவின் சிறந்த கதாநாகயனுக்கான விருதை பெற்றார்.
20வது ஐஃபா விருது நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் ரன்வீர் சிங், அலியா பட் உட்பட முன்னனி பாலிவுட் நாயகர்கள், நாயகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், கருஞ்சாம்பல் நிற பிளேசர் மற்றும் பேண்ட் அணிந்திருக்க, ஆலியா பட் நியூடு நிற கவுன் அணிந்து இருந்தார். இந்த நிகழ்வில் பத்மாவத் திரைப்படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கும், ராஜி என்கிற படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட்டிற்கும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய ஆலியா பட், “நீங்கள் எல்லோரும் நள்ளிரவு 2 மணிக்கும் இங்கு அமர்ந்து நாங்கள் விருதுகளால் கவுரவிக்கப்படுவதை பார்க்கிறீர்களெனில், உங்களுக்கு சினிமா மீதான ஈர்ப்பு இருப்பதால் தான். அதனால் தான் எங்கள் பணியை தொடர்ந்து செய்கின்றோம். ராஜி திரைப்படத்திற்காக இவ்விருதை பெற்றிருப்பது அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், மிக முக்கிய நடிகைகளுடன் போட்டி போட்டு, இவ்விருதை பெற்றிருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
தேசிய விருதுக்கு சொந்தக்காரரான விக்கி கௌஷல், சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். அத்தோடு, சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்காக தீபிகா படுகோனேவுக்கும், பர்ஃபி திரைப்படத்திற்காக ரன்பீர் கபூருக்கும், 3 இடியட்ஸ் படத்திற்காக ராஜ்குமார் ஹிரானுக்கும், ஏ தில் ஹை முஷ்கில் படத்திற்காக ப்ரீத்தமிற்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் கடந்த 20 ஆண்டுகளிலேயே மிகச்சிறந்த படமாக கஹோ நா பியார் ஹை திரைப்படம் இருப்பதாக, அப்படத்திற்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.