கொல்கத்தா: யாஸ் புயல் ஆய்வுக்காக மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடியை காக்க வைத்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அம்மாநில தலைமைச் செயலாளரை மத்தியஅரசு அதிரடியாக மாற்றம் செய்தது. இதையடுத்து,  மாற்றப்பட்ட மேற்குவங்க தலைமைச்செயலரை பதவி விலக செய்த முதல்வர் மம்தா பானர்ஜி, அவருக்கு மாநில தலைமை ஆலோசகர் பதவி வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக, மோடி தலைமையிலான மத்தியஅரசின் அதிகாரபோதைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சரியான முறையில் சாட்டையை சுழற்றியுள்ளார்.

மத்தியஅரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகார மோதலைத்தொடர்ந்து, மேற்குவங்க தலைமைச்செயலாளர் அலாபன் பந்தோபாத்யாவை உடனே விடுவிக்குமாறு மாநில அரசுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.  ஆனால், அந்த கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பிய மேற்கு வங்க அரசு, எந்த காரணத்துக்காக அவரை விடுவிக்க வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அவரை விடுவிக்க முடியாது என்றும் கூறியிருந்தது. இது சர்ச்சையானது.

மேற்குவங்க தலைமைச்செயலாளர் அலாபன் பந்தோபாத்யா மே 31ஆம் தேதி பதவி ஓய்வு பெறவிருந்தார். ஆனால், மத்திரயஅரசு, அவரை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு   மத்திய பணியில்  சேருமாறு அழுத்தம் கொடுத்தது.

இந்த விவகாரம் பிரச்சினையானதைத் தொடர்ந்து,   தமது ஐஏஎஸ் பணியில் இருந்து அலாபன் பந்தோபாத்யாய விலகுவதாக அறிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை மத்தியஅரசுக்கு அனுப்பினார்.  இதையடுத்து மாநிலத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஹெச்.கே. திவிவேதி மாநில தலைமைச்செயலாகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், பதவி விலகிய அலாபன் பந்தோபாத்யாவை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனது தலைமை ஆலோசகராக நியமித்து உத்தரவிட்டு உள்ளார். இதனால் மோடி அரசின் மூக்கு உடைக்கப்பட்டு உள்ளது.  மோடி தலைமையிலான மத்திய அரசின் அதிகார மமதைக்கு, மேற்கு வங்க மாநில அரசு  சவுக்கடி கொடுத்துள்ளது.