மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, அவனியாபுரத்தில் நடைபெற்றது. நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந் நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணன் முதல் பரிசான காரை வென்றார்.
9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பணன் 2ம் பரிசாக பைக்கை வென்றார். 8 காளைகளை அடக்கிய சக்தி என்பவருக்கு ஒரு சவரன் தங்கக் காசு பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கு குருவித்துறை சந்தோஷ் என்பவரின் காளைக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.