ட்சயபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் உள்ளது.

பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது.

விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோவில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பித்ரசாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.


அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். விநாயகர் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்க வழிபாடு செய்கிறார்கள்.