சென்னை: அட்சய திருதியை நேற்று ( ஏப்ரல் 10ந்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், தங்கத்தின் விலையும் 3முறை உயர்ந்து அதிர்ச்சி அளித்த நிலையிலும், தமிழக மக்கள்  விலை உயர்வை கண்டுகொள்ளாமல் ரூ.14ஆயிரம் கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் எது வாங்கினாலும் அவை வளரும் என்பது ஐதீகம்.  குறிப்பாகத் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்பது தமிழக மக்களிடையே  உள்ள  நம்பிக்கை.  அதனால் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க மக்கள் நகைக்கடைகளில் அலைமோதினர்.

இதற்கிடையில், நேற்று காலை  6 மணி நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.6,600-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கும் விற்பனை ஆனது. பிறகு காலை 8.30 மணியளவில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,705-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,640-க்கும் விற்பனை ஆனது. ஆனால்,  பின்னர்,  மதியம் 3 மணி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.65 உயர்ந்து ரூ.6,770-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.520 உயர்ந்து ரூ.54,160-க்கும் விற்பனை ஆனது.

இருந்தாலும் மக்கள் விலை உயர்வை கண்டுகொள்ளாமல் நகைக்கடைகளை தேடி ஓடிக்கொண்டே இருந்தனர்.   இதற்கிடையில் தங்கம் விற்பனை கடைகளும் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டன. அதன்படி, அட்சய திருதியையொட்டி ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ரூ.50 முதல் ரூ.100 வரை சிறப்புத் தள்ளுபடி, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்கினால் பழைய தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக அளிப்பு, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி என பல சிறப்புத் திட்டங்களை நகைக்கடைகள் அறிவித்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது

அட்சய திருந்தியையொட்டி,  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு விற்பனை நடைபெற்றது. இதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை)  காலை 6 மணி முதல் நகைக் கடைகள் திறக்கப்பட்டு நள்ளிரவு வரை விற்பனை நடைபெற்றது. சில கடைகளில் விடிய, விடிய விற்பனை தொடா்ந்தது

சென்னையில் முக்கிய வணிக மையங்களான தியாகராய நகா், புரசைவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்பதிவு செய்து பலா் நகைகளை வாங்கினா்.. . சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளிலும் சிறப்பு விற்பனை நடத்தப்பட்டது.  நேற்று  தங்கத்தின் வலை  அதிகபட்சமாக சவரனுக்கு  ரூ.1,240 வரை உயா்ந்தது. இருப்பினும், நள்ளிரவு வரை நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறையவே இல்லை. தமிழக மக்களின் தங்கத்தின் மீதான மோகம் பிரமிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய   சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ஜெயந்தி லால் ஜலானி ,  2023-ஆம் ஆண்டு அட்சய திருதியையுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கம், வெள்ளி நகைகளின் விற்பனை சுமாா் 30 சதவீதம் வரை அதிகரித்தது.

2023-ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11,000 கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அது 14,000 கோடியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.  அதுபோல கடந்த ஆண்டு 20 டன் எடையளவில் தங்கம் விற்பனையான நிலையில், நிகழாண்டில் அது 26 டன்-ஆக உயர வாய்ப்புள்ளது.

இது குறித்த துல்லியமான விவரம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். மேலும், நிகழாண்டு விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் 80 சதவீதம் மட்டுமே ஆபரண நகைகளாகும். மீதமுள்ள 20 சதவீதம் நாணயங்களாகவே விற்பனையானது என்று தெரிவித்துள்ளார்.