ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் நடிகர் அஜித் குமார் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள லாக்கர்பை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
1988 ம் ஆண்டு 270 பேரை பலி வாங்கிய போயிங் விமான வெடிவிபத்து உலகையே உலுக்கியது.
ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பான் ஆம் 103 விமானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இந்த விமானத்தில் பயணம் செய்த 243 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பலியாகினர்.
ஸ்காட்லாந்து நாட்டின் லாக்கர்பை நகருக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானம் வெடித்ததில் விமானத்தின் பாகங்கள் கீழே விழுந்ததில் அந்நககரில் வசித்த 11 பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் 270 பேரை பலிவாங்கிய இந்த தீவிரவாத தாக்குதலுக்கு லிபிய நாட்டைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரியான அப்டெல்பாசெட் அல் மெக்ராஹி தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் பலியானவர்களுக்கு லிபிய அரசு இழப்பீடு வழங்கிய போதிலும் உலகளவில் நடைபெற்ற மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலில் ஒன்றாக இதுவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தனது மனைவி ஷாலினியுடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஸ்காட்லாந்து நாட்டின் லாக்கர்பை நகரில் உள்ள நினைவிடத்தில் அஜித் அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.