ஊரடங்கு உத்தரவு ஏப்.14ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்லலாம் எனக் கருதி வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்டனர்.
ஆனால் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். சம்பவமறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் பாந்த்ரா சம்பவம் குறித்து நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் பேசினார்.
எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு முஸ்லிம்தான் காரணம். ஆனால் இந்த (பாந்த்ரா) பிரச்சினைக்கு யார் காரணம் என்று யோசித்தீர்களா? என கேட்டிருந்தார் .
இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக மும்பை போலீஸார் அஜாஸ் கான் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (18.04.2020) மும்பையில் அஜாஸ் கான் கைது செய்யப்பட்டார்.