அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்,  முனியாண்டிபுரம், விளாச்சேரி,  மதுரை மாவட்டம்.

சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார்.

அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது மானிட அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி உத்திர நட்சத்திரம் சனிக்கிழமையில்தான் நிகழ்ந்தது.

தேவலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட குழந்தை ஒரு காட்டில் கிடந்தது. குழந்தையின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. பந்தளமன்னர் ராஜசேகரன் அக்குழந்தையை எடுத்து, “மணிகண்டன்” எனப் பெயரிட்டு சொந்த மகனைப்போல் வளர்த்து வந்தார்.

இதன் பிறகு ராஜசேகர மன்னரின் பட்டத்தரசி “ராஜராஜன்” என்ற மகனைப் பெற்றாள். தனக்கென மகன் இருந்தாலும் முதல் மகனான மணிகண்டனுக்கு பட்டம் சூட்ட மன்னர் நினைத்தார். இதை வஞ்சகம் நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை.

மகாராணியின் மனதை மாற்றி ராஜராஜனுக்கு முடி சூட்டும்படி கூறினார். மருத்துவர் மூலம் புலிப்பாலால்தான் தன் தலைவலி போகும் என கூறச் செய்தாள். காட்டிற்குச் சென்ற அவர் தர்ம சாஸ்தா என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள், பொன்னம்பலத்திற்கு அழைத்து சென்று, இரத்தின சிம்மாசனம் அமைத்து பூஜித்தனர்.0

இந்த இடம் தான் தற்போது ஐயப்பன் ஜோதியாகக் காட்சி தரும் பொன்னம்பல மேடாக விளங்குகிறது. பின்பு புலிகளுடன் நாடு திரும்பிய ஐயப்பனிடம், எதிரிகள் மன்னிப்பு கேட்டனர்.

தான் தெய்வப்பிறவி என்றும், தனக்கு 12 வயது முடிந்து விட்டதையும் மன்னருக்கு உணர்த்திய மணிகண்டன், தான் அங்கிருந்து ஒரு அம்பை எய்வதாவும், அது எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார். அதன் படியே பந்தளராஜா கோயில் கட்டி முடித்தார். 

ஐயப்பன் அவரது காலத்தில் போர்வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம் “பாண்டிச்சேவகம்” புரிந்துள்ளார். அதன் நினைவாக ஐயப்பனுக்கு சபரிமலையில் இருப்பதைப்போன்ற தோற்றத்தில் மதுரை விளாச்சேரி அருகில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அருள்பாலிக்கும் ஐயப்பன் ராஜதேஜஸ், சின்முத்திரையுடன், யோகாசனத்தில் யோக பட்டயம் அணிந்தும், வீராசனத்தில் வடமேற்கு திசையில் உள்ள சபரிமலையை பார்த்தபடியும் அமர்ந்திருப்பது சிறப்பாகும். 

ஐயப்பனின் அவதாரம் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. சபரிமலையில் வீற்றிருக்கும் அவர், அங்கு வர முடியாத தன் பக்தர்களுக்காக, பல இடங்களில் காட்சி தருகிறார்.அவற்றில் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலும் ஒன்று. 3 கால பூஜை நடக்கும் இக்கோயிலில் தினமும் அதிகாலையில் அஷ்டதிரவிய மகாகணபதி ஹோமம் நடக்கிறது. பார்வதிதேவி மேற்கு நோக்கியும், கணபதி கிழக்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். பகவதி, சிவன், குருவாயூரப்பன், சுப்ரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளது. இங்கு ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

 திருவிழா:

ஆண்டுதோறும் டிசம்பர் 25ல் கொடியேற்றப்பட்டு ஜனவரி முதல் தேதி ஆறாட்டு விழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், தை முதல் தேதி, பிரதிஷ்டை தினமான ஆனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, சித்திரை விஷு, நவராத்திரி விழாக்களும் உண்டு. தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 5.30 -6 மணிக்கு விளக்கு பூஜையும், முதல் சனிக்கிழமையில் நெய் அபிஷேகமும் நடக்கிறது.