மும்பை: கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, அதிக சந்தாதாரர்களைப் பெறுவதில், ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜியோவை விட, இரண்டு மடங்கு அதிகமாக புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது ஏர்டெல்.

கடந்த செப்டம்பர் மாதத்தில், ஏர்டெல் பெற்ற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.77 மில்லியன். அதேநேரத்தில், ஜியோ பெற்ற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.46 மில்லியன் மட்டுமே.

அதேசமயம், வோடபோன் ஐடியா நெட்வொர்க்கின் சந்தாதாரர் எண்ணிக்கை, அந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்தபிறகு, முதன்முறையாக 300 மில்லியன்களுக்கு கீழே சென்றுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும், இந்நிறுவனம் 4.65 சந்தாதாரர்களை இழந்துள்ளது.

அதேசமயம், மொத்த சந்தாதாரர் எண்ணிக்கையில் ஜியோ நிறுவனமே முன்னிலை வகிக்கிறது. அதன் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 404.12 மில்லியன். ஏர்டெல்லின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 326.61 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.