டில்லி:
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மார்ச் 8ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தாக கூறப்பட்டது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ப.சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது விசாரணை நடத்தி வரும் பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 8ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதுவரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டது.