கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவில் கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைபில் . கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ள படம் ஐரா .
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கலையரசன், இயக்குநர் சர்ஜூன், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
“நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.” என்றார் இயக்குநர் சர்ஜூன்
கலையரசன் பேசுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாரா தான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது.” என்றார்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி பேசுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் சர்ஜுன், தயாரிப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.