சென்னை:
சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 25ந்தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ள இந்த விமான சேவை மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட உள்ளது. இந்த விமான பயணத்திற்கு ரூ. 1700 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விமான பயண நேரம் 45 நிமிடம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையை இயக்க ‘ட்ரூஜெட்‘ எனப்படும் விமான நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த விமான சேவை வருகிற 25-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.30 மணிக்கு சேலம் கமலாபுரம் விமான நிலையம் வந்தடைகிறது.
பின்னர் சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உதான் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஏலத்தின் அடிப்படையில் சமீபத்தில் 5 விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி காரணமாக சேலம் விமான நிலையம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில்,அடுத்தக்கட்டமாக சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.