சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாகப் பதிவானதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பொதுமக்கள் வெடி வெடித்து கோலாகலமாக பண்டிகையை கொண்டாடியதால், சென்னை உள்பட நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விவசாயிகளின் காய்ந்த பயிர்களை எரிப்பதால், ஏற்படும் காற்று மாசு மற்றும் அரசின் எச்சரிக்கையை மீறி வெடி வெடிக்கப்பட்டால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை உள்பட பல மாநிலங்களிலும் காற்று மாசு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காற்று மாசு குறைவாக இருந்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுவாரியம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து அந்த வாரியம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது; தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் தீபாவளி தினத்திலிருந்து (அக்.31) 7 நாள்களுக்கு முன்பாகவும், 7 நாள்களுக்குப் பின்பாகவும் காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கணக்கொடுப்பது வழக்கம்.
அதன்படி, சென்னையில் 7-இடங்கள், செங்கல்பட்டு, கடலூா், காஞ்சிபுரம், வேலூா், சேலம், திருப்பூா், கோவை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ஒசூா், தூத்துக்குடி, நாகா்கோவில் ஆகிய மாவட்டங்களில் தலா 2 இடங்கள் என மொத்தம் 39 இடங்களில் அக்.24 முதல் நவ.7 -ஆம் தேதி வரை காற்றுத்தர அளவு கண்காணிக்கப்படுகிறது.
அந்த வகையில், அக்.31-ஆம் தேதி காலை 6 முதல் நவ.1 காலை 6 மணி வரை மேற்கொண்ட ஆய்வில் காற்றுத்தர குறியீட்டு அளவு (ஏக்யூஐ) அதிகபட்சமாக சென்னை வளசராவாக்கத்தில் 287 -ஆகவும், குறைந்தபட்சமாக கடலூரில் 80-ஆகவும் பதிவானது.. இதில், சென்னையில் 4 இடங்களில் 200 ஏக்யூஐ-க்கு அதிகமாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
கோவை, சேலம், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 150 முதல் 190 ஏக்யூஐ வரை பதிவாகினது.
கடந்த ஆண்டு காற்றுத்தர குறியீட்டு அளவு அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 365-ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் காற்றின் மாசு அளவு நிகழாண்டு சற்று குறைந்துள்ளது.
அக்.31-இல் ஒலி மாசு அளவு அதிகபட்சமாக ஒசூா் நகராட்சி அலுவலகத்தில் 91.5 டெசிபலும், திருச்சி மாவட்டம் தில்லை நகரில் 85.6 டெசிபலும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகா்கோவில் ஸ்காட் கல்லூரியில் 57.3 டெசிபல் பதிவாகினது. அதேபோல் சென்னையில் ஒலி மாசு 59 முதல் 74 டெசிபல் வரை பதிவானது .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.