மும்பை: டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்ட ஏர்இந்தியா நிறுவனத்தில் தற்போதுள்ள 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் குறைந்த பட்சம் 4ஆயிரத்து ஐநூறு ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வெளியேற்ற டாடா சன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அரசின் விமான நிறுவனமாக செயல்பட்டு வந்த ‘ஏர் இந்தியா’, இந்திய விமான சேவையில் மகாராஜாவாக வலம் வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் ஏர்இந்தியா பெரும் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அண்மைக்காலத்தில் அதன்நஷ்டம் ரூ.70,000கோடியை எட்டிய நிலையில், ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்தியஅரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து 18ஆயிரம் கோடி ரூபாய்க்கு, டாடா நிறுவனம் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏர்இந்தியாவை கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 12,085 பணியாளர்கள் உள்ளனர், அவர்களில் 8,084பேர் நிரந்தரம் மற்றும் 4,001 பேர் ஒப்பந்த பணியாளர்கள் என கூறப்படுகிறது. அதுபோல ஏர் இந்தியா எகுறைந்த கட்டண சர்வதேச பிரிவான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 1,434 பணியாளர்கள் உள்ளனர். தற்போதுள்ள ஊழியர்களில், சுமார் 5,000பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர்.
இந்த நிலையில், பலரை நீக்கிவிட்டு, திறமையானவர்களை நியமிக்க டாடா சன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சுமார் 4,500 ஏர் இந்தியா ஊழியர்களை, வெளியேற்ற டாடா நிர்வாகம் முடிவு செய்து, தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விருப்ப ஓய்வு – ஆர்எஸ்) அறிவித்து உள்ளது. அதன்படி 55 வயது அல்லது 20 ஆண்டுகள் தொடர்ந்து விமான சேவையை முடித்த நிரந்தர ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்து உள்ளது.
விமான சேவையில் புதிய திறமையாளர்களை பணியமர்த்துவதன் மூலம் புதிய ஆற்றலைப் புகுத்தும் நோக்கில் டாடா குழுமம் இந்த உத்தியை கையாண்டு உள்ளதாகவும், இது, அதன் செலவு-சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதுடன் விமான சேவையை புதுப்பித்தல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் கலாச்சாரத்துடன் தொன்மையான அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பதில் அதிக ஈடுபாடுகளை ஏற்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கூறிய டாடா சன்ஸ் நிறுவன அதிகாரி, ஏர் இந்தியா செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம். மேலும் நவின புதிய டாப் நாட்ச் விமானங்களையும் வாங்குகிறோம், அதனால், புதிய என்ஜின்கள் மற்றும் இயந்திரங்களைக் கையாளுவதற்கு சர்வதேச அனுபவத்துடன் கூடிய டாப் நாட்ச் திறமையுள்ள பணியாளர்கள் எங்களுக்கு தேவை. அதனால் பழைய ஊழியர்களுக்க விஆர்எஸ் அறிவித்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.