புதுடெல்லி: தங்கள் சம்பளத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஊதிய வெட்டில்’ அறிவிக்கப்பட்ட 5% தளர்வை ஏற்க மறுத்துள்ளனர் ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகள்.

இதற்கு பதிலாக, அந்த 5% நிதியை, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுதல் மற்றும் பிஎம் கேர்ஸ் ஆகியவற்றுக்கு நன்கொடையாக அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனம், தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால், தொழில்முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். த பைலட்டுகள் யூனியன், இந்திய பைலட்டுகள் கில்டு மற்றும் இந்திய வர்த்தக விமான பைலட்டுகள் அசோசியேஷன் போன்ற அமைப்புகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

“சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட சம்பள வெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 5% தளர்வை நாங்கள் ஏற்கமாட்டோம். இதை, புதிதாக கட்டப்படும் நாடாளுமன்றம் மற்றும் பிஎம் கேர்ஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கலாம்.

எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத சம்பள வெட்டிற்கு தீர்வு காண்பதற்காக, அதிகளவு நேரத்தை நாங்கள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அளித்தோம். ஆனால், முறையான தீர்வு ஏற்படாத பட்சத்தில், தொழில்முறை வேலைநிறுத்தம் செய்ய தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் அமைப்புகளின் சார்பில் கூறப்பட்டுள்ளது.