டில்லி:
தனியார் மயம் ஆக்குவதற்கு முன் தங்களது நிலுவை தொகையை வழங்க வேண்டும் என ஏர் இந்தியா பைலட்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய வர்த்தக பைலட்கள் சங்கம் சார்பில் மத்திய விமானபோக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் ‘‘சட்டவிரோதமாக 25 சதவீத பறக்கும் படி மற்றும் இதர படிகள் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு முன் இவற்றை பைலட்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் ‘‘பிடித்தம் செய்யப்பட்ட படி மற்றும் அரியர்ஸ் ஆகியவற்றை வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அப்போது தான் புது நிர்வாகம் தூய்மையான நிதி அறிக்கையை தொடங்க முடியும். ஏர் இந்தியாவை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தது. அப்போது சில ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரியர்ஸ் பணம் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
கடந்த மார்ச் வரை 48 ஆயிரத்து 876 கோடி கடனில் இருக்கும் ஏர் இந்தியாவை மேம்படுத்த அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அமைச்சரவை அமைத்துள்ளது. இச்சங்கத்தில் ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தம் 27 ஆயிரம் ஊழியர்களுக்கு அரியர்ஸ் ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இதில் ரூ. 400 கோடி பைலட்களுக்கு மட்டும் நிலுவை உள்ளது.
தனியார் மயத்தால் வேலை இழப்பு ஏற்படும் என இதர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ‘‘விமான நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஊழியர்களுக்கு தான் தெரியும் என்பதால் தனியார் மயம் ஆன பிறகும் அனைவரும் பணியில் தொடருவார்கள்’’ என அமைச்சர் ராஜூ ஒரு நேர்கானலில் தெரிவித்திருந்தார்.