வாட்ஸ் அப் பயன்படுத்துவோரது விபரங்களின் பாதுகாப்பை ஆராய குழு!! மத்திய அரசு

Must read

டில்லி:

சர்வதேச அளவில் அதிகமானோர் வாட்ஸ் – அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் புதிய தனி நபர் ரகசிய கொள்கை (ப்ரைவஸி பாலிசி) கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, வாட்ஸ் – அப் பயன்பாட்டாளர்களின் தொலைபேசி எண்கள், அவர்கள் பயன்படுத்தும் செல்லிடப்பேசியின் வகை, அவற்றில் இடம்பெற்றுள்ள ஆபரேடிங் சிஸ்டம் ஆகியவை தொடர்பான தகவல்களை, தனது தாய் நிறுவனமான பேஸ்புக்கில் இணைக்க முடிவு செய்தது.

இந்த புதிய கொள்கையை ஏற்பவர்கள் வாட்ஸ் – அப் சேவையைத் தொடரலாம் என்றும், விரும்பாதவர்கள் அந்த செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம் என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது. தனிப்பட்ட தகவல்களைப் பிற தளங்களில் பகிர்வதற்கான முயற்சி என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பயன்பாட்டாளர்களின் ரகசியம் காக்கும் உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. வாட்ஸ் அப் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவற்றை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. இன்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசு ‘‘வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது’’ என தெரிவித்தது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும். அவர்கள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க சட்டம் இயற்றப்படும்’’ என்றார்.

இதனையடுத்து பயனாளர்கள் விவரங்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்வது உண்மையா? என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பிரமாண மனு தாக்கல் செய்யுமாறு வாட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

More articles

Latest article