டில்லி
ஏர் இந்தியா விமான ஊழியர் ஒருவர் தாங்கள் சிகாகோவில் தங்கியுள்ள விடுதியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதால் தங்களை அங்கு தங்க வைக்க வேண்டாம் என மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விமான ஊழியர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, கை நிறைய சம்பளம், சொகுசு ஓட்டலில் இலவசமாக தங்குதல், இலவசமாக விமானத்தில் பல நாடுகளுக்கு பயணம் என்பதே. ஆனால் அவர்கள் அதற்கும் மேல் பல தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதே உண்மை.
சிகாகோ நகரில் ஒரு ஹோட்டலுடன் ஏர் இந்தியா ஒப்பந்தம் ஒன்று செய்துக் கொண்டுள்ளது. அதன்படி சிகாகோ பயணம் முடிந்ததும் ஓய்வெடுக்க பணியாளர்களுக்கு அங்கு அறை ஒதுக்கப்படும். அங்கு ஓய்வெடுத்த பின் அடுத்த விமானத்தில் அவர்கள் பணி துவங்கும் என முறை வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஓட்டல் குறித்து குழுவின் தலைவர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ”அந்த ஓட்டலில் பல அமானுஷ்ய சக்திகள் உலவுகின்றன. இந்த ஓட்டலில் பேய் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களால் தனியாக படுத்து உறங்க பயமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் ஒன்றாகவே உறங்குகிறோம். மேலும் நாங்கள் பயத்தின் காரணமாக சரியாக ஓய்வு எடுக்க முடியவில்லை. அதனால் எங்கள் பணியை சரிவர செய்ய முடிவதில்லை.
இந்த விடுதியின் அமானுஷ்யம் பற்றி இணையத்தில் பல தகவல்கள் உள்ள போதிலும் நிர்வாகம் எதற்கு இந்த விடுதிக்கு ஒப்பந்தம் அளித்தது எனப் புரியவில்லை. நான் இங்கு 2016ல் இருந்து பலமுறை தங்கி உள்ளேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த விடுதியை விட்டு வேறு ஏதாவது விடுதியில் எங்களை தங்க வைக்க வேண்டுகிறேன்.
எங்களில் பலரும் இந்த விடுதியில் பல பயங்கர அனுபவங்களை சந்தித்துள்ளதால் உடனடியாக விடுதியை மாற்றி தரவும். அப்படி விடுதியை மாற்றும் வரையில் எனக்கு சிகாகோ செல்லும் விமானத்தில் பணி ஒதுக்க வேண்டாம்.
ஏதும் விபரீதம் நடக்கும் முன்பு நல்ல முடிவு எடுப்பது சாலச் சிறந்தது”
என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்..
அந்தக் கடிதத்தில் அவருடைய அனுபவம் என்ன என்பதைச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.