டில்லி:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் தனிப்படை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை பயங்கரவாதிகள் வடமாநிலங்களில் தாக்கல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி, காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது.
‘இந்த நிலையில், பாலகோட் பகுதியில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், இந்திய ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த ஷம்ஷெர் வானி மற்றும் அவனது கூட்டாளிக்கு இடையேயான கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கொண்ட தகவல் பரிமாற்றங்களை வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று இடைமறித்து அறிந்தது.
அதில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதற்கு பதிலடியாக பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவது என திட்டமிட்டது தெரிய வந்தது. மேலும் பல இடங்களில் இந்த மாதம் மிகப்பெரிய தாக்குதல் நடத்த உள்ள திட்டம் பற்றி அவர்கள் பேசி கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து வட இந்தியாவில் விமானப்படை தளங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு 10 பயங்கரவாதிகளின் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள அனைத்து முக்கிய இந்திய விமானப்படை தளங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய விமானப்படை ஸ்ரீநகர், அவந்திபூர், ஜம்மு, பதான்கோட் மற்றும் ஹிந்தான் (உஜியாவின் காஜியாபாத் அருகே) ஆகிய விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விமானப்படை தரப்பில் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்தந்த இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய மூத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.