பீஜிங்

சீனா போயிங் விமான கொள்முதலை நிறுத்தி விட்டு ஏர்பஸ் விமானத்தை கொள்முதல் செய்ய உள்ளது.

உலக அளவில் போயிங் விமானம் விற்பனையில் முதல் இடத்தில் இருந்தது.   குறிப்பாக சீனா மிக அதிக அளவில் போயிங் விமானம் கொள்முதல் செய்து வந்தது.   சமீபத்தில் ஐந்து மாதங்களுக்குள் போயிங் விமானம் இரு முறை விபத்துக்குள்ளானது.   இரண்டு முறையும்  விமானத்தில் இருந்த அனைவரும் மரணம் அடைந்துள்ளனர்.

இதை ஒட்டி பல உலக நாடுகள் போயிங் விமானத்தை இடைக்கால தடை செய்துள்ளன.    சீனா போயிங் விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வறிக்கை அளிக்குமாறும் அதுவரை கொள்முதல் ஆர்டர் கொடுத்த விமானங்களை வாங்கப் போவதில்லை எனவும் அறிவித்தது.   போயிங் விமானத்தில் பாதுகாப்பு நடவடிக்கைக்கான மென்பொருட்கள் தனியாக வாங்க வேண்டி இருக்கும் என தகவல்கள் வந்தன.

இந்நிலையில் பிரெஞ்சு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்துக்கு $ 3500 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய சீனா ஆர்டர்கள் அளித்துள்ளது.  இந்த தகவலை ஏர்பஸ் விமான நிறுவன தலைமை அதிகாரி ராப் ஸ்டலார்ட் உறுதி செய்துள்ளார்.    இந்த கொள்முதலில் ஏர்பஸ் தயாரிப்பான ஏ 320 மற்றும் ஏ 350 ஆகிய இரண்டு ரக விமானங்களும் இடம் பெற்றுள்ளன.

உலகில் அதிகம் விமானப்பயணம் மேற்கொள்ளும் சீன விமான சேவை நிறுவனம்  போயிங் விமானங்களை அதிக அளவில் வாங்கி வந்தது.   தற்போது சீனா  ஏர்பஸ் விமானங்களை வாங்க உள்ளது போயிங் விமானத்துக்கு மிகப்பெரிய சரிவு என கூறப்படுகிறது.  விற்பனை அளவில் ஏர்பஸ் தற்போது போயிங்கை பின் தள்ளி உள்ளது.