மதுரை: தமிழ்நாட்டில், நடப்பாண்டில் எழுத படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4.80லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மாநிலம் முழுவதும் கல்வியறிவு இல்லாத, 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மூலம் கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயம் செய்தோம். ஆனால் இலக்கை தாண்டி 3.19 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்கப்பட்டது.
அதுபோல, நடப்பாண்டில் 4.80 லட்சம் பேர் கல்வியறிவு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள. இந்த இலக்கை தாண்டி முடிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், இத்திட்டத்திற்கு ரூ.9.83 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார் என்றும் கூறினார்.
நாடு முழுவதும் தேசிய எழுத்தறிவுத் திட்டம் (National Literacy Mission) என்பது 1988 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமாகும். இந்த திட்டத்தின்படி, எழுத்தறிவு பெறாத, 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு எழுத்தறிவு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு இயக்கம் என்கிற இலக்குடன் எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.