டில்லி:
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த சரவணன் கடந்த ஜூலை 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. இவர் திருப்பூர் அருகே வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன்.
டாக்டர் சரவணன் சாவு குறித்து ஒன்றரை மாதம் கழித்தும் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படாததால் அவரது தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், எனது மகன் சரவணன் கொலை செய்யப்பட்டு 1½ மாதம் ஆகியும் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை என எதுவுமே வழங்கவில்லை. திட்டமிட்டு எனது மகனை கொலை செய்துள்ளனர். என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை. நீதிமன்ற கண்காணிப்பில் நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், மனுதாரருக்கு சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை நகல்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாணவர் சரவணன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த பரிசோதனை அறிக்கை டாக்டர் சுதிர் கே.குப்தா தலைமையிலான மருத்துவக்குழு தயாரித்துள்ளது. அதில் டாக்டர் சரவணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரவணனின் உடலில் யாரோ விஷ ஊசியை செலுத்தியிருக்க வேண்டும் என்றும், மருத்துவம் தெரிந்தவராலேயே அவ்வாறு ஊசியை செலுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் சரணவன் மரணம் குறித்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சரணவனுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா? கடைசியாக சரவணன் அறைக்கு சென்றது யார்? என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.