டில்லி

கில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 1.3 லட்சம் இடங்களை வரும் ஜூலை முதல் குறைக்க உள்ளது.

தற்போது நாடெங்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளன.   அத்துடன் வேலை இல்லாமல் இருப்போரில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்களே அதிகம் உள்ளனர்.    இது குறித்து உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஹர்கோர்ட் பட்லர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நிகழ்த்தி அரசுக்கு அளித்தது.

அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுவைகளை ஒட்டி அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.  அதில், “பொறியியல் படிப்பு படிப்பதற்கு பல மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.   தங்கள் குழந்தைகள் பொறியியல் கல்வி பயில பெற்றோர்களும் விரும்புகின்றனர்.   அதனால் பல பொறியியல் கல்லூரிகள் உருவாகி ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் உருவாகி உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு ஒரு தொழிலகத்தில் பணி புரியும் அளவுக்கு திறமை இருப்பதில்லை.    அடிப்படை பொறியியல் அறிவு கூட இல்லாமல் பலர் பட்டம் பெற்றுள்ளனர்.     இந்த நிலை மாறுவதற்காக அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் இடங்களை குறைக்குமாறு கேட்டுக் கொண்டது.   அதை ஒட்டி நாடெங்கும் சுமார் 1.3 லட்சம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.  வரும் ஜூலை மாதம் இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது”  என அறிவித்துள்ளது.

கடந்த வருடக் கணக்கின் படி பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.