காஞ்சிபுரம்:

ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு உதவிசெய்தது அதிமுகவினரும், காவல்துறை அதிகாரியும் என்று புலனாய்வுத்துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

துரையை சேர்ந்த ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்று காஞ்சிபுரம் கலெக்டர் தகவல் தெரிவித்திருந்த நிலையில், ரவுடி செல்வம் விவிஐபி பாசில் தரிசனம் செய்ய உதவி செய்தது அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும், ஒரு காவல்துறை அதிகாரியும் என்பது தெரிய வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அத்திவரதரை  சாமானிய மக்கள் தரிசிக்க பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலையில், ரவுடி வரிச்சூர் செல்வம் தனது கூட்டாளிகள் 5 பேருடன், முக்கிய நபர்கள் வரும் விவிஐபி வழியில் வந்து தரிசனம் செய்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவுடிக்கு விவிஐபி அந்தஸ்து கொடுத்து யார், அவர் உள்ளே வர பாஸ் எவ்வாறு கிடைத்தது என கேள்வி எழுப்பப்பட்டு, சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து கூறிய காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரிச்சூர் செல்வத்தை  திமுக பிரமுகர்கள் அழைத்து வருவது சிசிடிவி காமிரா பதிவில்  தெரிய வந்துள்ளது.  இதுகுறித்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை  செய்து வந்த மாநில புலனாய்வுத்துறை அதிகாரிகள், அதிமுக முக்கிய பிரமுகரிடம் இருந்து வரிச்சூர் செல்வத்துக்கு விவிஐபி பாஸ் பெறப்பட்டு உள்ளதாகவும், இதற்கு காவல்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி உதவி செய்து உள்ளதாகவும் கூறி உள்ளனர். இது தொடர்பான அறிக்கை உயர்மட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியரோ, திமுகவினர் ரவுடியை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ள நிலையில், புலனாய்வுத்துறை அதிகாரிகளோ, அதிமுக பிரமுகர் உதவி செய்தாக கூறியுள்ளனர்.

மாறுபட்ட இந்த அறிக்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு திட்ட மிட்டு மக்களை குழப்ப இதுபோன்ற நாடகத்தை அரங்கேற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.