சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்திதத, தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று ஆவேசமாக கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக தலைமை மறுத்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிமுக விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைசெயலாளர் எல்.கே.சுதீஷ், “ அ.தி.மு.க கூட்டணியில் தேமுதிகவுக்கு கேட்கப்பட்ட தொகுதிகள் கிடைக்காததால் இருந்து விலகியுள்ளோம் என்றார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும், இதை, தேமுதிகவினர் தீபாவளியாக கொண்டாடுவர் என்றார்.
மேலும், தேர்தலில் அதிமுகவை வீழ்த்த தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தவர், கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாகவும், பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் செயல்படுகிறார் என்று காட்டமாக விமர்சித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி, சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.