சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும், ஊடங்களின் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் நிலைக்கு வந்துள்ளது. அதாவது, கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளபோல பெருந்தோல்வியை சந்திக்கவில்லை என்பதும், அதிமுகவுக்கு கவுரவமான தோல்வியே கிடைத்துள்ளது என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
அதிமுகவின் கவுரமான தோல்விக்கு அவர் பெரிதும் நம்பிய பாமகவும், கொங்கு மண்டலமும்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. திமுக, அதிமுக கூட்டணி மட்டுமில்லாது அமமுக, மநீம கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டது.
திமுக 173 இடங்களில்தனித்து களத்தில் உள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில், அதிமுக 179 இடங்களில் தனித்து போட்டியிட்டது,. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி. இருந்தாலும் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்த நிலையில், திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக கவுரவமான தோல்வியையை சந்தித்துள்ளது. பெரும்பாலான ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் பொய்யாகி உள்ளன.
பகல் 1மணி வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை மண்டலம் வாரியாக பார்த்தால், அதிமுக கவுரமான தொகுதிகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் என்பது தெளிவாகிறது.
சென்னை மண்டலத்திலுள்ள 90 சதவிகித தொகுதிகளை திமுகவே கைப்பற்றி இருப்பது தெரிய வருகிறது. மொத்தமுள்ள தொ குதிகளில் திமுக 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.
வடக்கு மண்டலத்தில், வன்னியர் உள்ஒதுக்கீட்டுடன் பாமகவின் துணையோடு களம்கண்ட அதிமுகவுக்கு ஓரளவே பலன் கிடைத்துள்ளது. இருந்தாலும் அங்கு திமுக, அதிமுக சம பலத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி 16 இடங்களிலும் திமுக கூட்டணி 16 இடங்களிலும் இங்கே முன்னிலை வகிக்கின்றன. இதனால் அதிமுகவுக்கு பாமக தோள்கொடுத்து கவுரவமான தோல்விக்கு வழி வகுத்துள்ளது.
மத்திய மண்டலங்களைப் பொறுத்தவரையல், திமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெறும் நிலை உருவாகி உள்ளது. திமுக 22 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலம் மீண்டும் அதிமுகவுக்கு கைகொடுத்துள்ளது. 35 தொகுதிகளில அதிமுக வெற்றி பெறும் நிலை உருவாகி உள்ளது. திமுக கூட்டணிக்கு 14 தொகுதிகளே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
திருச்சி டெல்டா மண்டம் திமுகவின் கோட்டையாக மாறி உள்ளது. 13 இடங்களில் திமுக கூட்டணியும், 5 இடங்களில் அதிமுக கூட்டணியில் முன்னிலை பெற்றுள்ளன,
தென் மாவட்டங்களில் திமுக 33 தொகுதிகளிலும் அதிமுக 18 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் அதிமுக கவுரவமான தோல்வியை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவினாலும், அமமுக,. தேமுதிக, மநீம கட்சிகளை விட, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி மக்களிடையே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான தொகுதிகளிலும் திமுக, அதிமுகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது. இளைஞர்களின் வாக்குகள் சீமானுக்கு கிடைத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
அதிமுகவுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்து வந்த அமமுகவும் இந்த தேர்தலில் காணாமல் போயுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளி வீசி, எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த டிடிவி தினகரன் வெற்றியும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவரது கட்சி வேட்பாளர்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்த தேர்தலில் தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தங்களுக்கு வாக்கு வங்கி இருப்பதாக மார்தட்டிக்கொண்டு, அதிக இடங்களை கேட்டு தொல்லைப்படுத்திய நிலையில், வேறு வழியின்றி அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, இந்த தேர்தலில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளாக சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மட்டுமே கோவை மேற்கு தொகுதிகளில் இழுபறியில் இருந்து வருகிறார். அவரது வெற்றியும் கேள்விக்குறியாகவே உள்ளது. மற்ற வேட்பாளர்கள் அனைவரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
2021 சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் வேளியான பிறகு, தேமுதிக, மநீம, அமமுக, சமத்துமக்கள் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் முற்றிலுமாக தமிழக மக்களால் வாஷ்அவுட் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.