சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக  எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ.மறைவுக்கு பிறகு சுக்குநூறாக உடைந்த அதிமுக, பல பகுதிகளாக சிதறி கிடக்கிறது. தற்போது அதிமுக முழுமையாக கைப்பற்றி எடப்பாடி பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில்,  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், எடப்பாடிக்கு  எதிராக போர்க்கொடி தூக்கி பல வழக்குகளை போட்டுள்ள நிலையில், அதிமுகவின் சின்னமான  இரட்டை இலை சின்னத்தை கேட்டு அடம் பிடித்து வருகிறார்.

இதுதொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து முடிவு எடுத்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  வரும் 19-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவும், 23-ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் வழக்கு தொடர்ந்து சூர்யமூர்த்தி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.