‘பட்ஜெட்’டுக்கு பின் பாதை மாறிய அ.தி.மு.க… பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயாராகிறது…
அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாட்டை ‘பட்ஜெட்’டுக்கு முன்-‘பட்ஜெட்’டுக்கு பின் என இரு வகைப்படுத்தலாம்.
கடந்த வெள்ளிக்கிழமைக்கு(பட்ஜெட் தாக்கல் ஆன தினம்) முன்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ,பா.ஜ.க.மீது – சேற்றி வாரி அல்ல- கூவத்தையே குப்புறப்படுத்தி வசை மாறி பொழிந்தனர்.
மக்களவை துணை சபாநாயகரும்,கரூர் எம்.பியுமான தம்பிதுரை –பா.ஜ.க.வை வறுத்தெடுத்த கனவான்களில் முக்கியமானவர்.
‘’தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது’’ என்று சாபமிட்டார்.
அ.தி.மு.க.செய்தி தொடர்பாளரும்,எம்.ஜி.ஆரின் அமைச்சரவை சகாவுமான பொன்னையனும் இதே போன்ற வார்த்தைகளை உதிர்த்தார்.
‘’தமிழ்நாட்டில் நாங்கள் பா.ஜ.க.வை தோளில் தூக்கி சுமக்க முடியாது’என்றும் கர்ஜித்தனர்.
ஆனால் வெள்ளிக்கிழமைக்கு பிறகு அவர்கள் குரல் மாறிவிட்டது.
‘’ தமிழகத்துக்கு பா.ஜ.க.நல்லது செய்தால் அவர்களுடன் கூட்டணி வைக்க தயார்’’ என்று தம்பிதுரை அண்மையில் திருவாய் மலர்ந்துள்ளார்.
பா.ஜ.க.பற்றி கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தாறுமாறாக பேசியபோது பெரிதாக ‘ரீ-ஆக்ட் ’செய்யாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘பட்ஜெட்’டை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கிறார்.
என்ன காரணம்?
‘’மத்திய ‘பட்ஜெட்’-பா.ஜ.க.வுக்கு வாக்குகளை அள்ளி கொடுக்கும் வகையில் மக்களை சென்ற டைந்துள்ளதால்- அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது ஓரளவு பலனை தரும்’’என்று அ.தி.மு.க நிர்வாகிகள், 2 ஆம் கட்ட தலைவர்களிடம் –தங்கள் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து- முதலாம் கட்ட தலைவர்கள் – பா.ஜ.க.மேலிடத்துடன்,கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டதாக தகவல்.
-பாப்பாங்குளம் பாரதி