சேலம்: சேலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சாவை டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒருவருடமாக கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேசன் கஞ்சா 2.0 என அறிவித்து கஞ்சா வேட்டையை நடத்துவதாக அறிவித்தார். இருந்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாகவே மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குள்ளேயே கஞ்சா விற்பனை நடைபெற்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கொடுங்கையூர் பகுதியில், அடியாட்களுடன், கத்திகள் வைத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட , பெண் தாதா உட்பட 9 பேரை கைது செய்தனர். இதில் சிலர் ஆளும்கட்சி பிரமுகர் என்று கூறப்படுகிறது. அதுபோல கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்பட்ட வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல இடங்களில் கஞ்சா பொட்டலம் சுவிக்கி, ஷோமட்டோ போல வேடமணிந்தவர்களால் டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சேலத்திலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சேலம் பழைய பேருந்து நிலையில், புதிய பேருந்து நிலையில், ரயில்நிலையம் அருகே என பல பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்த 17வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது கஞ்சாவை வீட்டுக்கு டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் பெற்று இரு சக்கர வாகனம் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கஞ்சா பொட்டலம் டோர் டெலிவரி செய்து வந்த, சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் 16வது வார்டு பகுதியை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கஞ்சா போன்ற போதைபொருட்கள் விற்பனைக்கு மூலக்காரணமாக இருப்பதே அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்தான் என்பது பல இடங்களில் நிரூபணமாகி உள்ளது. டிஜிபின் கஞ்சா வேட்டை 2.0 என்னவானது….