டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று 8வது நாளாக அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை, தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அதிமுக எதிர்க்கும் என்று கூறினார்.

பாராளுமன்ற கூட்டத்தில், ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்.பிக்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பி.க்களும்  அமளியில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாராளுமன்றம் இன்றும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றம் வளாகத்தில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான, தம்பி துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாராளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள  அமளிகளுக்கு இடையே மக்களவையில் நிதி மசோதா நிறைவேறி உள்ளது. நாங்கள் போராடும்போது பாராளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றியது கருப்புதினம் என்று கூறினார்.

மேலும், காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்து பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று குற்றம் சாட்டிய தம்பித்துரை, அது குறித்து எந்த பதிலும் தராமல் எங்களின் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க மறுப்பதாக கூறினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தம்பித்துரை, காவிரி. மேலாண்மை வாரியம் அமைக்க தவறும்பட்சத்தில் மக்களின் உணர்வுக்கு ஏற்ப போராட்டம் விரிவடையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மக்கள் எதிர்க்கும் நியூட்ரினோ திட்டத்தை அ.தி.மு.கவும் எதிர்க்கும் என்றும்  கூறினார்.