டில்லி:

ச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.

இது சபையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற மேல்முறையீடு வழக்கில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள, மத்திய பாஜக அரசு,  காலம் தாழ்த்தி வருகிறது.

உச்சநீதி மன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

பாராளுமன்ற 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அதிமுக எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் 17வது நாளாக பாராளுமன்ற அவைகளை முடக்கி வரும் அதிமுக எம்..பி.க்கள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று கூறி உள்ளனர்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன்,  காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால், அதிமுக எம்.பி.க்கள்  தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆவேசமாக பேசினார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு அமல்படுத்தாவிட்டால் அரசியல் சாசனம் எதற்கு என்று கேள்வி எழுப்பிய அவர், தங்களை ராஜினாமா செய்ய சொல்லி தமிழக மக்கள் வற்புறுத்தி வருவதாகவும் கூறினார்.

நவநீதகிருஷ்ணன் பேச்சால் மாநிலங்களவையில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.