சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சலசலப்புகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கூட்டத்திலேயே ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும்போது, திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதும், அதை சபாநாயகர் தடுக்காமல் அமைதியாக இருந்ததும் சபை மாண்பை கேலிக்குரியதாக்கியது. மேலும், ஆளுநர் சில வார்த்தைகளை மரபுமீறி வாசித்ததும், அதற்கு அப்போதே மரபுகளை மீறி  கண்டன தீர்மானம் கொண்டு வந்ததும், மரபுகளை மீறி ஆளுநர் இடையிலேயே அவையில் இருந்து வெளியேறியதும், தமிழக சட்டப்பேரவைக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது. இது விவாதப்பொருளாகி வருகிறது.

இந்த நிலையில்,  பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற உள்ளத. இதையடுத்து, இன்று அவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி தலைலர்  எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக்கு முடிவெடுக்காமல் இருக்கும் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வருகை புரிந்ததாக தெரிவித்துள்ளனர்.