சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  இன்று 2வது நாளாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி  அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தநிலையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 20ந்தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இன்று 3வது கூட்டத்திற்கு  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில்,  இன்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அவைத்தொடங்கியதும், கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரிஎ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு,  “கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்னையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம்”  என்றும்,  திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,  விதிகள் படி கூட்டத்தொடரின் முதல் ஒரு மணிநேரம் வினாக்கள் – விடைகள் நேரம் என சுட்டிக்காட்டினார். தற்போது பேச அனுமதிக்க முடியாது என்றார்.

இதையடுத்து,  கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என தொடர் முழக்கமிட்டு அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.