சென்னை: தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்க அதிமுக அரசு அதிகவிலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டின் மின்தடை ஏற்படாத வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் தனியாரிடம் இருந்தும் மின்கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் தமிழக மின்வாரியம் கடுமையான நிதிச்சிக்கலில் சிக்கியது.
இதுகுறித்து, கடந்த 21ந்தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதில், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் தவறான நிர்வாகத்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், சொல்லப்பட்டது.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் பேசும்போது, “கடந்த ஆட்சியில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், அதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அதிக குளறுபடிகள் இருப்பதால்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து, மின்சார நஷ்டம் தொடர்பாக இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கை இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜி.எம்.ஆர்.மின் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து சந்தை விலையில் ரூ.3.39 முதல் ரூ.5.42-க்கு பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய்க்கு கடந்த ஆட்சி காலத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அவ்வாறு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.