சென்னை:  அதிமுக விவகாரம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுடன்  அதிமுகவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் சென்றுள்ளார்.  இன்று மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் அவர் சமர்ப்பிக்க உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில்சிக்கல் எழுந்தது. மேலும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அதிமுகவில் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதில், இருதரப்பினரும் கலந்துபேசி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி, அவர்களின் ஒப்புதல் கோரியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் , அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுன்,  இன்று (பிப்.6ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம்  டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இருவரும் சமர்ப்பிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது முடிவை இன்று இரவு அல்லது நாளை காலை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், நாளை (பிப்ரவரி 7ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.